Thursday, April 25, 2024

 கே.எஸ்.சிவகுமாரன்.

அஞ்சலிக் குறிப்பு

கே.எஸ்.சிவகுமாரன். (October 1, 1936 - September 15, 2022





மதிப்புக்குமுரிய கே.எஸ் சிவகுமாரன் அவர்கள் இயற்கையடைந்தார் என்ற செய்தி வெளியானபோது அந்தத் தகவல் எனக்கு கொஞ்சமும் எதிர்பாராத அதிர்ச்சியளிக்கும் தகவலாகவே இருந்தது. அவர் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக  உடல் நலம் பாதிக்கப்பட்டவராக இருந்த போதும் தொடர்ச்சியான வைத்தியப் பராமரிப்புடன் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததையும் நான் அறிவேன். அவரது காலம் ஒட்சிசன் சிலிண்டரின் உதவியுடன் நகர்வதையும் நான் அறிந்திருந்தேன்.முகநூலில் அவர் தொடர்ச்சியாக ஏதாவது எழுதியோ அல்லது நண்பர்களது பதிவுகளைவாசித்துக் கொண்டோ இருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். அவர் பெரியளவுக்கு இயங்கித் திரிய முடியாமல் இருப்பினும் எழுதவும் வாசிக்கவும் செய்கிறார் என்பதால் நான் அவரது மறைவைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இறப்பதற்குச் சிலமணி நேரத்துக்கு முன்னதாகவும் கூட முகநூலில் அவர் ஒரு பதிவை இட்டிருக்கின்றார் என்பதை பின்னர் நான் கவனித்த போது,  இறக்கும் கடைசிக் கணம் வரை தன் மனதில் பட்ட விடயங்களைப் பகிர்ந்துகொள்ளும் அவரது வழமையான இயல்பை நினைக்கையில், அந்த அதிர்ச்சியுடன் கூடவே, மிகுந்த கவலையையும் ஏற்படுத்தியது. அண்மையில் கொழும்பு சென்றபோது, அவரைச் சந்திப்பதாக இருந்தும் வேறு வேலைகளால் அதை ஒத்திப்போட்டுவிட்டு வந்திருந்தேன். ஆனால் இன்னொருமுறை அவரைச் சந்திக்க முடியாது என்பது மிகுந்த கவலையளித்தது. 

கே.எஸ் சிவகுமாரன் அவர்களை நான் ஆர்வத்துடன்அதிகமாக வாசிக்கத் தொடங்கிய 70களின்  நடுப்பகுதிகளிலிருந்தே பத்திரிகைகளில் வந்த அவரது எழுத்துக்கள் ஊடாக அவரது  பெயரை அறிந்திருந்தேன். தினகரன்,  வீரகேசரி போன்ற பத்திரிகைகளில்  அவர் எழுதிவந்த எழுத்துக்களினூடாக இந்தப் பெயர் எனது மனதில் பதிந்திருந்தது. அப்போது நான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கியிருந்தேன். ஆயினும் எந்தப் பத்திரிகைகளும் எனது கதைகளைப் பிரசுரிக்கவில்லை. எனது கதைகள் நல்லதல்ல என்பதால் தான்  அவர்கள் அவற்றைப் பிரசுரிக்கவில்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பத்திரிகைகலில் வரும் பல கதைகளை விட நான் நன்றாகவே எழுதியிருக்கிறேன் என்று எனது நண்பர்களும் சொல்லியிருந்தார்கள். பத்திரிகைகள் ஏற்கனவே தமக்குத் தெரிந்தவர்களது கதைகளைத்தான் பிரசுரிப்பார்கள் என்றும் அவர்கள் சொன்னார்கள். நான் எனது பெயரை ‘விக்னேஸ்வரன்'  என்று மட்டுமே எழுதி அனுப்புவேன். ஆனால் எந்தக் கதையும் வெளிவரவில்லை. சுடரில் மட்டும் ஒரு கவிதை வெளியானதாக ஞாபகம். ஆனால் அவர்களும் எனது கதைகளைப் பிரசுரிக்கவில்லை.  அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை வந்தது. கே.எஸ். சிவகுமாரனின் பெயரைப் போல ஆங்கில முன்னெழுத்துக்களுடன் எனது பெயரை  எழுதலாமா என்று. கையிலிருந்த ஒரு சிறுகதைக்கு (பாஸ்) எனது பெயரை ‘எஸ் கே.விக்னேஸ்வரன்'  என்று பெயரிட்டு அனுப்பினேன். என்ன ஆச்சரியம், அந்தக் கதை இரண்டுமாதங்கள் கழித்து சிரித்திரனில் பிரசுரமானது. பிரசுரமானது மட்டுமல்ல, அதற்கு அப்போது வெளிவந்த கதைகளுக்கென வைக்கப்பட்ட ஒரு போட்டியில் முதற்பரிசும் கிடைத்தது. அதற்கு வடகோவை வரதராசன் அவர்கள் ஒரு நல்ல விமர்சனமும் எழுதியிருந்தார். இதன்பிறகு அந்தப் பெயரையே நான் தொடர்ந்தும் எனது எழுத்துக்களில் பாவிக்கத் தொடங்கினேன். நீண்ட காலத்துக்குப் பிறகு சரிநிகர் பத்திரிகை வெளிவரத் தொடங்கிய காலத்தில் (1990) தான் அவரைக் கொழும்பில் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் அவர் தவறாமல் வருவார். சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசுவதுண்டு. முதலாவது சந்திப்பிலேயே அவரது பத்தி எழுத்துக்களைத் தேடி வாசித்த ஒரு வாசகன்  நான் என்பதை அவரிடம் சொல்லியிருந்தேன். ஒரு சந்திப்பின் போது எனது பெயரை எஸ்.கே. போட்டு எழுதத் தொடங்கியது அவரது பெயரைப் பார்த்தே என்று நான் சொன்ன போது ஆச்சரியத்துடன்  புன்னகைத்தார். சரிநிகர் காலத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக்கள் இருந்தன.சரிநிகருக்காக ஒன்றிரண்டு கவிதைகளை மொழிபெயர்த்தும் தந்திருக்கிறார் என்று ஞாபகம். சரிநிகர் பத்திரிகையாக வ்ரந்ந்ததுகொண்டிருந்த காலத்தில் அதில் அவர் எழுதவில்லை. அவர் வெளிநாட்டில் வேலை காரணமாகச் சென்றிருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் சரிநிகர் சஞ்சிகை வடிவில் வந்த போது அவரது கட்டுரைகள் வெளிவந்தன. கடைசியாக வெளிவந்த சஞ்சிகையில்  சுவீடன் நாட்டுத் திரைப்பட நெறியாளர் இங்மர் பேர்க்மன் மறைந்ததை முன்வைத்து அவர் எழுதிய  ‘மனித மன ஆழங்களை ஊடுருவித் தேடிய திரைக்கலைஞர்'  என்ற அவரது அருமையான கட்டுரை வெளிவந்தது. 70 களில் போலவே அப்போதும் அவரது எழுத்தின் மூலமாக (2008 இலும்) நான் அறிய விடயங்கள் இருப்பதை அறிந்தபோது அவரது எழுத்துக்களின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.  



சரியாகச் சொல்வதானால், நான் அறிந்தளவுக்கு, தான் வாசித்த நூல்கள்,பார்த்து மகிழ்ந்த திரைப்படங்கள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என்பவை தொடர்பாக தொடர்ச்சியாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அவரளவுக்கு நீண்டகாலமாக  எழுதிவந்த இன்னொருவரை எமது தமிழ்ச் சூழலில் உண்மையில் என்னால் பெயரிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக அவர் எழுதிய எழுத்துக்கள்  தொகுக்கப்பட்டு  நூல்களாக வெளிவந்துள்ளன. அவரது சிறுகதைகள், பத்தி எழுத்துக்கள், திரைப்பட விமர்சனங்கள், கலை இலக்கிய திறனாய்வுக் கட்டுரைகள் என்று பல்வகைப்பட்ட விடயங்களை உள்ளடக்கியதாக நாற்பதுக்கும் மேற்பட்ட  நூல்கள் வெளிவந்துள்ளன. பத்திரிகைகளில் அவ்வப்போது பத்திகளாகவும் திறனாய்வுக் குறிப்புக்களாகவும், மதிப்பீடுகளாகவும் அவர் எழுதிய பல கட்டுரைகள், அவை வெளிவந்த காலத்தில் வாசகர்களுக்கு, குறிப்பாக ஆரம்பகால வாசகர்களுக்கு முக்கியமானபல விடயங்களையும் அறிமுகப்படுத்துதல், வழிகாட்டுதல் ஆகிய பணிகளை வழங்கி வந்திருக்கின்றன என்பதை, நானும் ஒரு பயனாளி என்ற வகையில்  நேரடியாக உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக தமிழ்நாட்டு வர்த்தகத் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த எனது பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு, திரைப்படங்கள்  சார்ந்த அவரது எழுத்துக்கள்தான் உண்மையில் திரைப்படம் என்ற ஊடகம் பற்றிய புரிதலை  ஓரளவுக்காவது பெற்றுக் கொள்ள உதவியவை என்பேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், ஈழத்துத்  தமிழ்ச் சூழலில்  திரைப்படம் என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல அது ஒரு கலை வடிவம் என்ற உணர்வும் புரிதலும் கொண்ட  ஒரு மாற்று அணுகுமுறை உருவாகுவதற்கும், கலாபூர்வமான திரைப்படங்களை நோக்கி (அளவில் சிறியதாயினும்) பார்வையாளர்களின்  கவனம் திரும்பவும்  அவரது எழுத்துக்கள் காரணமாக இருந்தன என்பது வெற்றுப் புகழ்ச்சியல்ல. இன்று தமிழ்ச் சூழலில் திரைமொழியின் அழகியலைப் பற்றிக் கவனிப்புக்குரிய எழுத்துக்களைத் தந்துள்ள முக்கிய ஆளுமைகளான அலை இதழின் ஆசிரியர்  அ.யேசுராசா, கோ.கேதாரநாதன் போன்றவர்கள் தமது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும்  கே.எஸ். சிவகுமாரனின் இந்தப் பங்களிப்புப் பற்றி பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

கே.எஸ் சிவகுமாரன் அவர்கள் பெற்ற விருதுகள் தொடர்பாக பத்திரிகைகள் விதந்து எழுதியுள்ளன. விருதுகள் ஒரு எழுத்தாளருக்கு அவரது எழுத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்பையும் அடிப்ப்டையாக வைத்து வழங்கப்படவேண்டும். கே.எஸ்.சிவகுமாரன் அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் பற்றியும் அதற்கான அவரது தகுதிபற்றியும் எனக்கு எந்தச் சந்தேகங்களும் இல்லை. அவருக்கு அவை கிடைத்ததையிட்டு அவரைப் போலவே எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அவருக்கு வழங்கிய மாதிரியான அதே விருதுகள் எல்லாம் காலத்துக்குக் காலம் வெவ்வேறு நபர்களுக்கும் வழங்கப்படும்போது விருது வழங்கப்படுவது ஒரு வெற்றுச் சடங்காகி வருகிறது என்ற உண்மையையும் நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. விருது பெற்றவர்களது பட்டியல்களைப் பார்க்கின்ற சமயங்களில் சிலவேளை  அதைச் செய்பவர்களின் பொறுப்பின்மை பற்றிய எரிச்சல் எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை. அதனால் அவர் பெற்ற விருதுகள் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அவர் பெற்ற எல்லா விருதுகளிலும் பெரிய விருது, அவரது நூல்கள், தமிழ் மொழியில்  இலக்கியம் கலை என்பன சார்ந்து இயங்கத் தொடங்கும் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய நூல்களாக இருக்கின்றன என்பதுதான். அவை வெறும் கலை,இலக்கியப் போக்குக்கள் பற்றிய தகவல்களை மட்டுமல்ல, கடந்த அரைநூற்றாண்டுகால ஈழத்துத் தமிழிலக்கியத்தின் போக்கின் அனைத்து வகைமாதிரிகளையும் பற்றிய  வரலாற்றுப் போக்கை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணங்களுமாகும். அவரது பார்வையுடன் உடன்படாத  பார்வை கொண்டவர்களுக்கும் கூட!  

 

பத்திரிகையாளர் அஜித் சமரநாயக்கவின் மறைவு குறித்த விரிவான அஞ்சலிக் குறிப்பொன்றையும் சரிநிகர் சஞ்சிகையில் எழுதியிருந்தார். அந்தக் குறிப்பில் அவர் அஜித் தொடர்பாக எழுதும் போது தன்னைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருப்பார்:

“எப்படி  நான் தமிழன் என்ற வகையில் என் வேர்களைப் புறந்தள்ளாது அவற்றில் காலூன்றித் தமிழார்வம் கொண்டவனாக இருந்தேனோ அதுபோன்று அவனும் சிங்கள உணர்வு கொண்டிருந்தான். இருவருமே குறுகிய கலையுணர்ச்சிப் பாங்கற்ற (Parochialism) விதத்தில் உலக நோக்குக் கொண்டிருந்தோம். இடதுசாரி அல்லது இடதுசாரி சார்ந்த இடைனிலைப் போக்கை (Left of Centre) அவன் கொண்டிருந்தான்”

ஆம். அவர் அப்படித்தான் இருந்தார். அதுவே அவரது எழுத்தின் பலமாகவும் இருந்தது.


அவருக்கு என் அஞ்சலிகள்!